ஒருவித்திலை, இருவித்திலை தாவரங்கள் என்றால் என்ன?
அதென்ன ஒருவித்திலை, இருவித்திலை? சாதாரண மக்களுக்கு இது எவ்வாறு விளங்கும் என நீங்கள் கேட்பது எழுதும் இக்கைகளுக்கும் கேட்கின்றது. அது ஒன்றும் பெரியவிடயமல்லவே.
நெல்,சோளம், இறுங்கு, குரக்கன், தினை, வரகு, சாமை, வெங்காயம், இஞ்சி, மஞ்சள், வாழை, கரும்பு, தென்னை, பனை, கமுகு, மற்றும் புற்கள் என ஒருவித்திலைத்தாவரங்கள் பலவுண்டு. இவற்றின் நீளமான இலையை வைத்துக்கொண்டும் இலைகளிலுள்ள நரம்புகளின் அமைப்பை வைத்துக்கொண்டும் நீங்கள் அவற்றை ஒருவித்திலை (Monocotyledons) என கண்டுபிடித்துவிடலாம்.
மாறாக இருவித்திலை (Dicotyledons) தாவரங்கள் எனப்படுபவை நாம் வழமையாக பயிரிடும் கத்தரி, தக்காளி, மிளகாயிலிருந்து அவரைப்பயிர்கள் மற்றும் பல்லாண்டு தாவரங்களான பப்பாளி, மா, பலா, என பலவும் இதனுள் அடங்கும்.
சரி இங்கே ஒருவித்திலைத் தாவரங்களுக்கும் இருவித்திலைத் தாவரங்களுக்குமான முக்கியமான வேறுபாடுகளை வரிசைப்படுத்தினால் இவை இரண்டும் அடிப்படையில் அமைப்பில் வித்தியாசமானவை. அத்துடன் இவற்றின் தோற்றமும் வித்தியாசமானது. மேலும் இவற்றின் இழையவியல் அமைப்பிலும் வேறுபாடுகள் காணப்படும். இவற்றுடன் முக்கியமானது என்னவெனில் இவ்விரண்டினதும் தேவைகள் வேறு வேறானவை. அதாவது இவற்றினது ஊட்டச்சத்து தேவை வித்தியாசமானதாக இருப்பதனால் ஓரிடத்தில் ஒருவித்திலையையும் இருவித்திலையையும் வளர்க்கும் போது இரண்டும் ஒன்றுக்கொன்று போட்டிபோடாது வளர்ந்திருப்பதை நாம் காணமுடியும்.
இதில் என்ன அதிசயமென்றால் ஒருவித்திலை பயிரிலும் இருவித்திலைப் பயிரிலும் தாக்கும் பீடைகள் வேறுபட்டவையாக இருப்பதுதான். இதுதான் இயற்கையின் நியதியோ என அதிசயிக்க வைத்திருக்கின்றது. அதனால் தனியாக ஒருவித்திலையையோ அல்லது இருவித்திலை பயிரையோ பயிர்செய்யாது இரண்டையும் கலந்து கலப்பு பயிராக பயிர்செய்தால் அவற்றில் ஏற்படும் பீடைப்பிரச்சனையை கணிசமான அளவு குறைத்து விடலாம். இதனை இப்படி கூறினால் எப்படி விளங்கும்? உதாரணத்துடன் தந்தால் தானே புரிந்து கொள்ள முடியும் என்றல்லவா கேட்கின்றீர்கள். சரி தொடர்ந்து உதாரணங்களைப் பார்ப்போம்.
ஒருவித்திலை, இருவித்திலை தாவரங்கள் இணைத்து நடவு செய்யும் முறை
மரக்கறிப்பயிர்களை நடவு செய்யும் போது குறிப்பாக மிளகாய் மற்றும் கத்தரி, தக்காளியை நடவு செய்யும் போது வெங்காயத்தை சேர்த்து நடவு செய்யலாம். ஏனெனில் மிளகாய் கத்தரி மற்றும் தக்காளி பயிர்களில் தாக்கும் பூச்சி பீடைகள் வெங்காயத்தில் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. அதேபோல வெங்காயப்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிபீடைகள் மிளகாய், கத்தரி தக்காளியில் சேதத்தை ஏற்படுத்துவதில்லை. மேலும் ஒருவித்திலை பயிர்களில் சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிபீடைகள் இருவித்திலைக் களைகளில் தங்கிவாழமுடியாதன அதுபோல இருவித்திலைக்களைகளில் வாழும் பூச்சிபீடைகள் ஒருவித்திலை தாவரங்களில் சேதத்தை ஏற்படுத்த முடியாதனவாகும். இவ்வாறான இயற்கையின் நியதியை நாம் முழுமையாக புரிந்து கொண்டால் பூச்சிபீடைகளை கட்டுப்படுத்தவும் களைகளை கட்டுப்படுத்துவதில் கையாளும் யுக்திகளை இலகுவாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒருவித்திலையையும் இருவித்திலையையும் ஒன்றாகக்காணும் பாக்கியம் ஏ9 பாதையில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும். பளைப்பகுதியைத் தாண்டி இயக்கச்சியை நோக்கி பயணிக்கும் போது பாதையின் இருமருங்கிலும் பனையைச் சுற்றி ஆல் அல்லது அரசமரம் வளர்ந்திருப்பதை காணலாம். இந்த காட்சி இயற்கையின் வெளிப்பாடு பலவற்றை அடித்துச் சொல்லியிருந்தாலும் சூழலியல் சார்ந்து குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லியிருக்கின்றது. அதாவது ஒருவித்திலையும் (பனையும்) இருவித்திலையும் (ஆல் மற்றும் அரசமரம்) ஒன்றாக வளர்ந்தால் (Coexist) ஒன்றுக்கொன்று போட்டியின்றி ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து வளர முடியுமென்றும் ஒவ்வொன்றும் தங்களது தனித்துவத்தை பேணமுடியும் எனவும் காட்டியிருக்கின்றன.
by
Prof.G.Mikunthan
Srilanka