குமரப் பருவத்தினரின் இயல்புகளையும் உடல் வளர்ச்சியின் தன்மைகளையும் புரிந்து கொண்டு அவர்களை தக்கவாறு வழிநடத்திச் சென்று இப்பருவத்தை அவர்கள் கடந்து செல்ல உதவ வேண்டிய பெரும் பொறுப்பு குடும்பத்தினருக்கு, பெற்றோருக்கு உண்டு.
வளரிளம் பருவ பிள்ளைகளை நல்வழிகாட்டிச் செல்ல பெற்றோரின் பங்கு:
- எப்போது பார்த்தாலும் "இதைச்செய் அதைச்செய்" என்று கட்டளையிட்டுக்கொண்டு இருப்பதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும்.
- போதனை செய்வதை அன்புடன் நிறுத்திக் கொள்வது நன்மை பயக்கும். அன்புடனும் நட்புணர்வுடனும் நல்வழி நடத்திச் செல்ல வேண்டும். எல்லா நேரமும் குறைகுற்றம் கூறிக்கொண்டே இருத்தல் கூடாது.
- தனிமையில் தவறுகளை நிதானமாக கூறி திருத்தல் வேண்டும்.
- பிள்ளை முன்னும் சரி, பிள்ளை இல்லாத நிலையிலும் எங்கும் பிள்ளையை பாராட்ட வேண்டும். மாறாக மற்றப் பிள்ளைகளை உயர்வாக பாராட்டக்கூடாது.
- பிள்ளைகள் செய்யும் தவறைப் பிறரிடம் கூறக்கூடாது.
- திருந்திய தவறை மீண்டும் கூறாது இருத்தல் வேண்டும்.
- பிறருடன் ஒப்பிட்டு புத்தி கூறக்கூடாது.
- உடன் பிறப்புக்களுடன் வித்தியாசம் காட்டி பாராட்டக்கூடாது.
- சில மணித்துளிகள் இன்னிசை கேட்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.
- பிள்ளைகள் முன்னிலையில் கணவன், மனைவி பிரச்சனைகள் தவிர்க்கப்பட வேண்டும். முடிந்தவரை பிள்ளைகள் முன்னிலையில் சண்டை சச்சரவுகளும், வீண் வாதங்களும் இடம்பெற்றுவிடாமல் பார்த்துக்கொள்வது கடமையாகிறது.
- நீ உருப்பட மாட்டாய், நீ எங்க படிக்க போகிறாய் போன்ற வார்த்தைகள் பாவிக்கக் கூடாது. இது இப்பருவத்தினரின் மனதை பெருமளவு பாதித்து அவர்களை மனசோர்விற்குள்ளாக்கி ஆளுமை பிறழ்வையும்(personality Disorder) ஏற்படுத்திவிடும்.
- ஒவ்வொரு நாளும் 1/2 மணி நேரமாவது பிள்ளைகளுடன் உரையாட வேண்டும்.
- இளம் பருவத்துப் பிள்ளைகளுக்கு ஒவ்வொருவருக்கும் உரி சுய தகுதிகள் உண்டு, அந்தத் தகுதிகளுக்கு வரம்புகள் உண்டு, அறிவாற்றல் உண்டு, அதற்கும் வரம்புகள் உண்டு, திறன்கள் உண்டு அவற்றிற்கும் வரம்புகள் உண்டு. ஆனால் பெற்றோர்கள் தகுதிக்கு மீறிய எதிர்பார்ப்பை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள். அன்பு பாராட்டுவதற்கும் நிபந்தனை விதிக்கிறார்கள். தோல்வியுற நேர்ந்தால் மறுக்கிறார்கள்.
- பிள்ளைகளுக்குப் பெற்றோரின் வேதனைக் காயங்களும் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் உணர்வற்ற மரத்துப்போன மனச்சான்றை கொண்டிருப்பர். அவர்களால் பெற்றோருக்கோ, சமுதாயத்திற்கோ, நாட்டிற்கோ ஒரு பயனும் கிடையாது. இவற்றை எல்லாம் பெற்றோர் புரிந்து கொண்டு செயற்படாவிட்டால் காலப்போக்கில் எதிர்ப்புணர்ச்சிகளும், அலட்சிய மனோபாவமும் உருவாகிட வழிவகுக்கும்.
- அன்பும் பரிவும் அரவணைப்பும் வேறு எங்கேனும் கிடைத்துவிட்டால் அதனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளவே அவர்களின் மனம் முற்படும். இவை கிடைக்காவிட்டால் எதிர்பாலாரிடம் தவறுதலாக நடந்து கொள்ளுதல், புகை பிடித்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு இலக்காகிட நேரிடும். எனவே பெற்றோர் அவர்களைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து அவர்களைப் புரிந்து கொண்டு அன்புடனும் பரிவுடனும் அவர்களை அணுகி அரவணைத்து நல்வழிகாட்டிச் செல்ல வேண்டும். இவற்றால் நல்ல சமுதாயத்தை உருவாக்க வழிவகுக்கலாம்.