புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட சில வழிகள்
வாழ்வில் கடைப்பிடிக்கும் சில கட்டுப்பாடான பழக்க வழக்கங்களினால் பெண்கள் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைத்திட முடியும்.
- எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல். குறிப்பாக மாதவிலக்கு நின்ற பின்னர் பெண்கள் தமது எடை துரிதமாக அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். உடற் பருமன் உள்ளவர்களில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
- மது, புகைத்தல் முதலானவை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
- தாய்ப்பாலூட்டல் மூலம் மார்பக புற்று நோயைக் குறைக்க முடியும். எனவே தாய்ப்பாலூட்டல் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மாத்திரமன்றி தாயின் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகிறது.
- பெண்களில் மாதவிலக்கு நின்றதும் அதனால் ஏற்படும் தாக்கங்களிலிருந்து விடுபட ஹார்மோன் வகை மாத்திரைகளின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. இந்த வகையில் நீண்ட காலம் ஹார்மோன் மாத்திரைகளை உபயோகிப்பது உகந்ததல்ல. குறிப்பாக வைத்தியரின் ஆலோசனையின்றி இம் மாத்திரைகளைப் பாவிக்கக் கூடாது. நீண்டகால உபயோகம் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
- நவீன குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் ஆபத்தற்றவை. எனினும் வைத்திய ஆலோசனையுடன் செய்வது நன்று. மாதவிலக்கு நிற்கும் வயதை நெருங்கிய காலங்களில் பாவிக்கும் போது வைத்தியப் பரிசோதனை மூலம் புற்றுநோய் அறிகுறிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
- ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் . Balanced Diet அதாவது போஷணை தேவைக்கு ஏற்ற அளவில் உள்ள உணவுகள் நன்று.
- போதியளவு உடற் பயிற்சி அவசியம் கடின உழைப்பு இல்லாதவர்கள் கட்டாயம் உடற் பயிற்சி அல்லது நடை பயிற்சி செய்ய வேண்டும் (Exercise or Walking).
- ஆரோக்கியமான சூழலில் வாழ்தல் நல்லது. சில சூழல் மாசுகள் புற்று நோய்க்கு வித்திடலாம்.
- முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மார்பு பரிசோதனையை மேற் கொள்ள வேண்டும். அத்துடன் கர்ப்பப்பை வாசல் படிவை பரிசோதிக்க வேண்டும் (Pap Smear).
- மணமாகாத பெண்கள் HPV தடுப்பூசி போடுவதன் மூலம் கர்ப்பப்பை வாசல் புற்றுநோயை தவிர்க்க முடியும். இத்தடுப்பூசி புற்றுநோய்க்கு காரணமா யிருக்கும் வைரஸை கட்டுப்படுத்தி 'கர்ப்பப்பை புற்றுநோயிலிருந்து விடுதலை அளிக்கிறது.