Type Here to Get Search Results !

தமிழைக்கண்டேன் - சிந்தனை கவிதை

0
tamil kavidhaigal, tamil poem, tamilai kanden kavidhai, sindhanai kavidhai thoguppugal, tamil poet paavalar karumalai tamizhalan short poems
தமிழைக்கண்டேன்

இயற்கையெழில்     கொஞ்சுகின்ற    கோலா    லம்பூர்
            இனியதமிழ்   கலப்பின்றி   ஒலிக்கும்   நல்லுர்
செயற்கைமுகம்    இல்லாமல்   அன்பு   தோய்ந்து
            செந்தமிழின்   இனிமைபோல்   சிரிக்கும்   மக்கள் !
வயல்வெளியில்   படர்ந்திருக்கும்   பசுமை    போல
            வளநெஞ்சில்    தமிழ்ப்பண்பு    மிளிர்ந்தி   ருக்கும்
வெயிலிடையே   வந்தநிழல்   இன்பம்   போல
            விருந்தோம்பல்    செய்வதிலே    சங்கத்   தமிழர் !

தமிழரங்கு    தம்முடைய    குழந்தை   கட்குத்
            தமிழினிலே   பெயர்சூட்டி    அழைக்கக்    கேட்டேன்
தமிழரங்கு   தாம்நடத்தும்   கடைக   ளுக்குத்
            தமிழ்பெயரை   எழுதிவைத்த    காட்சி   கண்டேன்
தமிழரங்கு   தம்மோடு    பேசும்    போது
            தனித்தமிழில்    உரையாடும்   அழகைக்    கண்டேன்
தமிழரங்கு    தமிழ்மொழியைப்    பேணு   கின்ற
            தமிழராகக்    கண்டுநானும்   வியந்து    போனேன் !

உண்பதற்குப்    போவோமென்    றழைத்தி   டாமல்
            உரியதமிழ்    பசியாறச்    செல்வோம்    என்றார்
தண்தமிழில்    பேருந்து   ஓட்டு   நர்தாம்
            தம்காடி    நான்குமணி     ஓட்டந்    தன்னில்
அண்டையூராம்     பினாங்குதனை    அடையு    மென்றே
            அரும்பயணம்    தனைத்தமிழில்   உணரச்    சொன்னார்
பண்தமிழில்    மட்டுமேநல்   வழிபா    டாற்றும்
            பத்துமலை    முருகனிடம்    பேசி    வந்தேன் !
நான்சென்ற    மலேசியாநல்   சிங்கப்   பூரில்
            நற்றமிழர்    ஒற்றுமையாய்    இருக்கக்    கண்டேன்
தான்பார்க்கா    திருந்தபோதும்   தம்மின்   முன்னோர்
            தாம்பிறந்த    தமிழ்நாட்டுப்    பண்பு   தன்னை
ஊன்குருதி    தனில்கலந்து    குழந்தை   கட்கே
            ஊட்டியின்றும்    அழிந்திடாமல்    காக்கின்   றார்கள்
ஏன்இந்த    தாய்த்தமிழின்    நாட்டில்   மட்டும்
            எள்ளிநகை    யாடுகின்ற    அவலம்    சொல்வீர் !
                                                                       - பாவலர்  கருமலைத்தமிழாழன்
tamil kavidhaigal, tamil poem, malaysia kuala lumpur, tamilan in malaysia kuala lumpur, tamilnadu people status, tamilnadu language respect, tamilai kanden kavidhai, sindhanai kavidhai thoguppugal, tamil poet paavalar karumalai tamizhalan short poems

கருத்துரையிடுக

0 கருத்துகள்