தண்ணீரைக் காப்போம்!
நிலத்தடியில் நீர்நிறைந்தி ருப்ப தற்கே
நிலம்மீது பெய்கின்ற மழையின் நீரைப்
பலப்பலவாய் நிலைகளிலே நம்மின் முன்னோர்
பாதுகாப்பாய் சேமித்தே வைத்தி ருந்தார்
நலமாக வாழவயல் விளைச்ச லுக்கும்
நல்லகுடி நீருக்கும் பஞ்ச மின்றிப்
புலம்தன்னை அன்றாண்ட மன்ன ரெல்லாம்
புரிந்தநல்நிர் வாகத்தால் கிடைக்கச் செய்தார் !
அரண்மனையைச் சுற்றிபெய்த மழையின் நீரை
அருமையாக வடிவமைத்த கால்வாய் மூலம்
அரணாகக் கோட்டையதன் மதிலைச் சுற்றி
அகழ்ந்தமைத்த அகழிதன்னில் சேமித் தார்கள்!
கரம்கோர்த்து மக்களெல்லாம் வாழ்ந்த ஊரில்
காலத்தே பெய்தமழை நீரை யெல்லாம்
வரம்பமைத்தே ஒருதுளியும் வீணா காமல்
வடித்தசிறை நீர்நிலையில் தேக்கி வைத்தார்!
பல்வகையாய்ப் பயன்படுத்தும் நீர்நி லைக்கே
பசுந்தமிழில் இலஞ்சியெனும் பெயரும் சூட்டி
நல்வகையாய் நீர்தன்னைச் சேமித் தார்கள்
நன்றாகக் கால்நடைகள் குளிப்ப தற்கே
சொல்லாலே குட்டையென்று பெயரை வைத்துச்
சொகுசாக அவைகளினை நீந்த வைத்தார்
செல்லாமல் பள்ளத்தில் தேங்கி நிற்கும்
செழும்நீரைக் கூவல்என்றே அழைத்துக் காத்தார்!
ஊற்றெடுத்து வாய்க்காலை அமைத்துக் கொண்டு
ஊர்ந்துவரும் நீர்தன்னை ஓடை என்றார்
ஏற்றமுடை வெற்பிருந்து கசியும் நீரை
எழிற்றமிழில் சுவையாக சுனையாம் என்றார்
காற்றடிக்கும் கடல்மணலில் குடிகத் தோண்டிக்
கட்டிவைத்த கிணற்றைஆழ் கிணறு என்றார்
நாற்றிசையும் கோபுரங்கள் காணும் கோயில்
நற்றலத்து நீர்நிலையைக் குளமாம் என்றார்!
ஏரிதன்னை ஊர்தோறும் அமைத்துக் காத்தே
எதிர்காலத் தலைமுறைக்கே விட்டுச் சென்றார்
ஊரிருந்த இவற்றையெல்லாம் தன்ன லத்தால்
உருவின்றி அழித்திருப்பைக் காலி செய்தோம்
வேரினையே பிடிங்கிமரம் சாய்த்தல் போல
வெறுமையாக்கிச் சந்ததிக்கே நிலத்தை வைத்தோம்
யாரிதனை நினைக்கின்றோம் ! இயற்கை தன்னை
யாவருக்கும் விழிப்புணர்வை ஊட்டிக் காப்போம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன்
tamil kavidhaigal, tamil poem, thanneerai kappom kavidhai by paavalar karumalai tamizhalan, Tamil padalgal, kavidhai thoguppugal, samooga sindhanai kavidhai, save water poem by poet paavalar, hosur, thanner mukkiyam, thanneer padhugappu sindhanai
தண்ணீரைக் காப்போம்! - சமூக நல சிந்தனை கவிதை
2:06 AM
0