"ஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது"
திண்டிவனம்: சென்னை ஆவின் பால் நிலையத்துக்கு அனுப்பிய பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்களை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர். 4 வாகனங்கள், ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பதனிடும் நிலையம் மாவட்டந்தோறும் செயல்பட்டு வருகிறது. சென்னையில் தலைமை பால் பதனிடும் நிலையம் இயங்கி வருகிறது. மாவட்டந்தோறும் சேகரிக்கப்படும் பால், மாவட்ட தலைநகரில் உள்ள பால் பதனிடும் நிலையத்துக்கு லாரிகளில் அனுப்பபடுகிறது. சென்னையில் உள்ள தலைமை நிலையத்துக்கும் அவ்வாறு செல்லும் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் தலைமையிலான போலீசார் திண்டிவனம் அருகே கோவிந்தாபுரம் என்ற இடத்தில் மாறுவேடத்தில்
மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 90 கேன்களில் 3600 லிட்டர் பால் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கோவிந்தாபுரத்தில் நின்றது. அங்கு ஏற்கனவே 2 மினிவேன்கள், 2 பைக் தயாராக இருந்தது. உடனே லாரியில் இருந்து இறங்கிய ஊழியர்கள் 40 கேன்களில் 20 கேன்களை இறக்கினர். பின்னர் லாரியில் இருந்த 20 கேன்களில் இருந்த பாலில் அதற்கு ஈடாக தண்ணீர் கலந்துள்ளனர். 15 நிமிடத்தில் இந்த வேலை முடிந்தது. அப்போது மறைந்திருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். ஆனால் லாரி மின்னல் வேகத்தில் அங்கிருந்து மாயமாகி விட்டது. அங்கிருந்த 7 பேர் கும்பலை போலீசார் மடக்கிப்பிடித்தனர். 2 மினிவேன்கள், 2 பைக், ரூ. 1 லட்சம் பணம், 1800 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags: Aavin Milk adulteration 7 arrested, Paalil kalappadam, Aavin Paalil thanneer kalappadam seidha 7 per konda kumbal kaidhu seiyappatadhu
Social Plugin