வாந்தி ஏன் வருகிறது, எவ்வாறு வருகிறது? <Vaandhi vara kaaranam enna>
வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம். உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது.
நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும். வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் பிரெனிக் நரம்பு, வேகஸ் நரம்பு, தண்டுவட நரம்பு, பரிவு நரம்பு, மூளைமைய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.
பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும். இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.