புதுடெல்லி, ஆக.19: தமிழக அரசின் மனுவை ஏற்று உச்சநீதிமன்றம் தமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய்களை பதிக்க இடைக்கால தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களின் வழியாக விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க கெயில் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு தமிழக அரசு தடை விதித்தது.
கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதால் அந்த மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாழாகிவிடும் என விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன், போராட்டங்களையும் நடத்தி வந்தன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதை நிறுத்த வேண்டும் என்று அறிவித்ததோடு, தமிழக அரசும் நிச்சயம் இதை ஏற்காது என்று உறுதிபட தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் குழாய் பதிக்க தடை விதிக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்பை விவசாயிகள் வரவேற்று பாராட்டினர்.
தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் கெயில் நிறுவனத்துக்கு ஆதரவாக, தமிழக அரசின் தடையை விலக்கி கடந்த ஆண்டு நவம்பர் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்நிலையில் தமிழக அரசுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் சங்கத்தினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் அமைக்க கெயில் நிறுவனத்துக்கு தடை விதித்தது.
இந்நிலையில், கெயில் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் குழாய்கள், உபகரணங்கள் வீணாவதால் அப்புறப்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
ஆனால் குழாய்கள், உபகரணங்களை அப்புறப்படுத்த தனியாக மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கெயில் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், கெயில் எரிவாயு குழாய்களை பதிக்க இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டது.
கடந்த 15-ந் தேதி சுதந்திரதின விழாவில் பங்கேற்று தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய தமிழக முதல்வர், “விளைநிலங்களின் வழியே கெயில் நிறுவன குழாய் பதிப்பு திட்டத்தை திடமாக, உறுதியாக எதிர்க்கும் அரசாக அதனை தமிழ்நாட்டில் காலூன்ற விடாத அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது” என்று குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
Social Plugin