Type Here to Get Search Results !

சைவம் - திரை விமர்சனம் !!

SAivam tamil cinema vimarsanam, Tamil movie Saivam review, saivam story  and review
நடிகர் : நாசர்
நடிகை : பேபி சாரா
இயக்குனர் : ஏ.எல்.விஜய்
இசை : ஜீ.வி.பிரகாஷ்குமார்
ஓளிப்பதிவு : நீரவ் ஷா

கிராமத்து பெரியவரான நாசருக்கு மூன்று மகன்கள், ஒரேயொரு மகள். இவர் துபாயில் வசித்து வருகிறார். மூத்த மகனும், இளையமகனும் சென்னையில் சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார்கள். மூன்றாவது மகன் கிராமத்தில் நாசருடன் இருக்கிறார். இவருடைய மகள் சாரா.

இவர்கள் ஊர் திருவிழாவிற்காக நாசரின் மகன்கள் மற்றும் மகள் எல்லோரும் குடும்பத்துடன் ஊருக்கு 10 நாட்கள் முன்னதாகவே வருகிறார்கள். வந்த இடத்தில் நாசரின் மூத்தமகனுடைய மகன் பாஷா, அவனது அத்தை மகளான துவாராவை காதலிக்கிறார். இது ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஒருநாள் இவர்கள் எல்லோரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட செல்கிறார்கள்.

அப்போது, கோவிலில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கில் சாராவின் பாவாடை எதிர்பாராமல் தீப்பற்றிக் கொள்கிறது. இதனால் பதட்டத்தில், அர்ச்சனைக்காக கொண்டுவந்த தட்டும் கீழே விழுந்துவிடுகிறது. காயமின்றி சாரா தப்பிக்கிறாள். ஆனால், கோயில் பூசாரியோ கோவிலுக்குள் தீ விபத்து ஏற்பட்டாலும், அர்ச்சனை தட்டு கீழே விழுந்தாலும் குடும்பத்துக்கு ஆகாது என்ற குண்டைத் தூக்கிப் போடுகிறார். இதற்கு பரிகாரம் என்னவென்று கேட்கும் நாசர் குடும்பத்திடம், உங்கள் குலதெய்வத்திற்கு நேர்த்திகடன் எதுவும் செய்யாமல் இருந்தால் அதை செலுத்திவிடுங்கள். சரியாகிவிடும் என்று கூறுகிறார்.

அதன்படி, இவர்கள் செய்யாமல் விட்ட நேர்த்திகடன் என்னவென்று குடும்பம் முழுவதும் அமர்ந்து யோசிக்கிறது. அப்பொழுது, பாப்பா என்று பெயர்வைத்து தன்வீட்டில் வளர்த்துவரும் சேவலை மூன்று வருடத்திற்கு முன்பு, சாமிக்கு நேர்த்திக்கடனாக கொடுக்க முடிவெடுத்து, அதை செய்யாமல் விட்டுவிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. ஆகையால், இப்போது அந்த சேவலை திருவிழாவில் பலிகொடுத்து நேர்த்திகடனை செலுத்திவிட்டால் தங்களுடைய குடும்பத்துக்கு நல்ல காலம் வந்துவிடும் என முடிவெடுத்து, அதை செய்ய முடிவெடுக்கின்றனர்.

இந்த சூழலில் சேவலான பாப்பா காணாமல் போய்விடுகிறது. அதைத் தேடி குடும்பத்தில் உள்ள அனைவரும் ஊரில் மூலை முடுக்கெல்லாம் சுற்றி திரிகின்றனர். இறுதியில், அந்த பாப்பாவை கண்டுபிடித்து குலதெய்வத்துக்கு நேர்த்திகடனாக பலி கொடுத்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

கிராமத்து பெரியவராக மனதில் நிற்கிறார் நாசர். நிறைய இடங்களில் இவரது அனுபவ நடிப்பு கைதட்டல் பெறுகிறது. இவருக்கு அடுத்தப்படியாக குழந்தை நட்சத்திரம் சாரா, படம் முழுவதும் தனது சாந்தமான முகத்தால் மனதை அள்ளுகிறார். சேவலை மறைத்து வைத்தது இவர் போடும் நாடகம், குட்டி பையனிடம் மாட்டிக்கொண்டு அவனை தாஜா செய்யும் குறும்பு என ஒவ்வொரு இடங்களிலும் சாராவின் நடிப்பு க்யூட். நாசரின் மகன் பாஷா அவரது பேரனாக நடித்திருக்கிறார். துறுதுறுப்பான இளைஞனாக இவருடைய நடிப்பு பலே. இவருடைய அத்தை மகளாக வரும் துவாரா, இளமை துள்ளலுடன், துறுதுறுவென இருக்கிறார். நம் அண்டை வீட்டு பெண்ணைப் போல அனைவரையும் கவர்கிறார்.

சுட்டி சிறுவனாக வரும் ரே பால் செய்யும் அட்டகாசம் தியேட்டரில் விசில்களை அள்ளுகிறது. மற்றபடி, படத்தில் வரும் சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என எல்லோருடைய கதாபாத்திரமும் ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை உறவுகளுடனும் வாழ்ந்த உணர்வை கொடுத்திருக்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் ஒரு கிராமத்துக்குள் வாழ்ந்த உணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஜய். தன்னைப் போலவே மென்மையான கதையில், அழகான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார். கடவுளின் பெயரால் பிராணிகளை வதைக்கும் மூடநம்பிக்கைகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார் இயக்குனர். மனதை தொடும் அளவுக்கு படத்தை எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘அழகே அழகே’ பாடல் மனதை அள்ளுகிறது. பாடலின் வரிகளும் அதனை படமாக்கிய விதமும் அருமையிலும் அருமை. சின்னி பிரகாஷின் ஒளிப்பதிவில் வீட்டில் வரும் காட்சிகளை படமாக்கியவிதம் அருமை. இவரது கேமரா படம் முழுவதும் கதையோடு ஒன்றி பயணித்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘சைவம்’ ஆரோக்கியமான சுவை.


Tags: Saivam tamil cinema vimarsanam, Latest tamil movie reviews, Saivam movie review, Saivam cinema review, Saivam story and performance and ratings, tamil film stories, Actor nasar and baby saara in Saivam tamil film 2014.