Type Here to Get Search Results !

‘அதிதி’ - திரை விமர்சனம்

athithi tamil cinema review
நடிகர் : நந்தா
நடிகை : அனன்யா
இயக்குனர் : பரதன்
இசை : பரத்வாஜ்
ஓளிப்பதிவு : ஜெய்

ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார் நந்தா. இவருடைய காதல் மனைவி அனன்யா. இவர்களுக்கு ஒரேயொரு பெண் குழந்தை இருக்கிறது.

ஒருநாள் நந்தாவும், அனன்யாவும் குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு காரில் பயணம் போகிறார்கள். வழியில், தன்னுடைய கார் ரிப்பேர் என்று சொல்லி, இவர்களிடம் லிப்டு கேட்கிறார் நிகேஷ் ராம். காரின் பின்னால் அவரை ஏற்றிக்கொள்ளும் இவர்கள், ஒருகட்டத்தில் நிகேஷ்ராம் இவர்களை துப்பாக்கி முனையில் தான் சொல்கிற இடத்துக்கு செல்லுமாறு அவர்களை மிரட்டுகிறார். இல்லையென்றால் தன்னுடைய வசம் இருக்கும் அவர்களுடைய குழந்தையை கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நந்தாவும் அனன்யாவும் வேறுவழியின்றி நிகேஷ்ராம் சொல்வதையெல்லாம் செய்கிறார்கள். நந்தாவின் வங்கி கணக்கில் இருக்கிற பணம் முழுவதையும் கேட்கும் நிகேஷ் ராம், அந்த பணம் தனக்கு கிடைத்தும், அதை எரித்து, ஆற்றில் தூக்கிப் போடுகிறான். பணத்துக்காக தங்களை மிரட்டவில்லை என புரிந்துகொண்ட நந்தா-அனன்யா, அவன் எதற்காக தங்களை மிரட்டுகிறான் என்பது புரியாமல் விழிக்கின்றனர்.

இந்நிலையில், நந்தாவின் உறவுக்காரரான தம்பி ராமையா இவர்களை பார்ப்பதற்காக ஊரில் இருந்து வருகிறார். வழியில் இவர்களது காரை பார்த்ததும் அதில் ஏறிக்கொள்கிறார். அதில் இருக்கும் நிகேஷ் ராமை பார்த்ததும், தனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்றும், அவரைப் பற்றிய முழு விபரங்களையும் நந்தாவிடம் விளக்குகிறார். ஒருகட்டத்தில் அதிகம் பேசிக்கொண்டிருக்கும் தம்பி ராமையாவை அந்த காரில் இறக்கிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

இதற்கிடையில், நிகேஷ் ராமின் பிடியில் இருந்து நந்தா இரண்டு முறை தப்பிக்க நினைக்கிறார். ஆனால், அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிகின்றன. நிகேஷ் ராம், நந்தா செய்யமுடியாது என மறுக்கும் அனைத்து காரியங்களை அவரது குழந்தையையும், அவரது மனைவியையும் சீரழித்துவிடுவதாக மிரட்டியே அனைத்தையும் செய்ய வைக்கிறார்.

அதுவரையில், சிறுசிறு வேலைகளை செய்யச் சொல்லும் நிகேஷ் ராம் இறுதியில், நந்தாவுடன் பணிபுரியும் அஸ்வதி வர்ஷாவை கொலை செய்தால்தான் உன்னுடைய குழந்தையை உயிருடன் கொடுப்பேன் என்று மிரட்டுகிறார்.

இப்படி திடீரென தன்னுடன் பணிபுரியும் அஸ்வதி வர்ஷாவை நிகேஷ் ராம் கொலை செய்யச் சொல்ல காரணம் என்ன? நிகேஷ் ராம் எதற்காக நந்தா-அனன்யாவை மிரட்டி காரியம் சாதித்துக் கொள்கிறார்? நந்தா, அஸ்வதி வர்ஷாவை கொன்று தங்களது குழந்தையை நிகேஷ்ராமிடமிருந்து திரும்பப் பெற்றார்களா? என்பதே மீதிக்கதை.

பொறுப்பான கணவனாகவும், தந்தையாகவும் திறமையான நடிப்பை பதிவு செய்திருக்கிறார் நந்தா. நிகேஷ் ராமின் மிரட்டல்களுக்கு அடிபணிந்து அவர் சொல்லும் வேலைகளை செய்யும் காட்சிகளிலும், அவரை எதுவும் செய்யமுடியவில்லையே என எண்ணி வருந்தும் காட்சிகளிலும் இவரது நடிப்பு அபாரம்.

நிகேஷ் ராம் தன்னுடைய முதல் படத்திலேயே அபார நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். படம் முழுக்க வில்லனாக வரும் இவர், கடைசியில் ஹீரோவாக மாறுவது இவர் கதாபாத்திரத்திற்கு மேலும் வலுவூட்டியிருக்கிறது.

தனக்கு துரோகம் செய்த மனைவிக்கும், சேவை செய்யும் இவருடைய கதாபாத்திரத்தின் நடிப்பு மிகவும் சிறப்பு.

அனன்யா தனது வழக்கமான துறுதுறு நடிப்பை ஓரம்கட்டி, அன்பான மனைவியாகவும், பொறுப்பான தாயாகவும் முத்திரை பதித்திருக்கிறார்.

தம்பி ராமையா வரும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன.

அஸ்வதி வர்ஷா பிற்பாதியில் கதையின் திருப்பத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். இவருடைய நடிப்பும் ஓகே ரகம்.

படம் ஆரம்பித்து 15 நிமிடத்தில் இருந்து ஒரு திகில் கதையைப் போல் நகர்த்தி செல்கிறார் இயக்குனர் பரதன். இறுதியில், குடும்பத்திற்கு தேவையான நல்ல கருத்தை அழகாக சொல்லியிருக்கிறார். படம் முழுக்க எங்கு செல்கிறது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இறுதிக்காட்சியில் திருப்திபட செய்திருக்கும் இவரை பாராட்டலாம்.

பரத்வாஜின் பின்னணி இசை கதையோடு நம்மை பயணிக்க வைத்திருக்கிறது. பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. ஜெய் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் வலுகூட்டியிருக்கிறது. காரில் பயணம் செய்யும் காட்சிகளில் இவரது கேமரா அழகாக பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘அதிதி’ அழுத்தம்.


Tags: Athithi tamil cinema vimarsanam, Tamil movie adhithi story, Actor nandha performance in Athithi tamil film, Tamil movie Adhithi review online, Athithi movie rating