அம்பத்தூர், புதூர் அன்பழகன் தெருவை சேர்ந்தவர் மோகன் குமார். இவரது மகள் சகானா தேவி (25). பெரம்பூரில் தனியார் கம்பெனியில் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல வேலைக்கு மின்சார ரயிலில் பெரம்பூர் வந்தார். 4வது பிளாட்பாரத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க நடந்து சென்றபோது காதில் செல்போனில் பாட்டு கேட்டபடியே சென்றார்.
அந்த நேரத்தில், சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. பாட்டு கேட்டபடியே சென்றதால் ரயில் வரும் சத்தம் அவருக்கு கேட்கவில்லை. பிளாட்பாரத்தில் இருந்த பொது மக்கள், ரயில் வருவதையும் அந்த தண்டவாளத்தில் இளம்பெண் நடந்து செல்வதையும் பார்த்து கூச்சலிட்டனர். ஆனால், அவர்கள் சத்தம் போட்டது சகானாதேவி காதில் விழவில்லை.
சுவாரஸ்யமாக பாட்டு கேட்டபடி சென்று கொண்டிருந்தார். எதேச்சையாக சகானா தேவி திரும்பி பார்த்த போது மின்சார ரயில் மிகமிக அருகில் வேகமாக வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். எங்கும் தப்பி ஓட முடியாததால் வேறு வழியின்றி பயத்தில் இரு தண்டவாளத்தின் நடுவே படுத்துக் கொண்டார். ரயில் பயணிகள் தொடர்ந்து கூச்சல் போட்டபடியே என்ன நடக்குமோ என்று பதற்றத்துடன் இருந்தனர்.
சகானா படுத்திருந்த தண்டவாளத்தின் மீது மின்சார ரயில் வேகமாக கடந்து சென்றது. உடனடியாக பிளாட்பாரத்தில் இருந்தவர்களும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் நெஞ்சம் பதற அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு காலில் மட்டும் அடிபட்டு தரையோடு தரையாக பயத்தில் படுத்திருந்த சகானா உயிருடன் இருப்பதை பார்த்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடனடியாக சகானா தேவியை தூக்கி ஓரமாக அழைத்து வந்தனர். அவருக்கு இடது காலில் லேசான காயம் மட்டும் ஏற்பட்டிருந்தது. ரயிலில் அடிபடாமல் அதிர்ஷ்டவசமாக சகானா உயிர் தப்பினார்.
தகவலறிந்து பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சேகர், எஸ்ஐ சுடலைமுத்து ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் அவரை ஏற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்டான்லி மருத்துவமனைக்கு சகானாவின் பெற்றோர் விரைந்து வந்தனர். காலில் சிறிய காயம் ஏற்பட்டதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று தெரிவித்த டாக்டர்கள் பெற்றோருடன் சகானாவை அனுப்பி வைத்தனர்.
Social Plugin