உருப்படமாட்டே, உதவாக்கரை முத்திரை குத்தலாமா?
உங்கள் பிள்ளை படிப்பில் 'வீக்'காக இருந்தாலும், துடுக்குத்தனமாக நடந்து கொண்டாலும் அது அவனுடைய தவறல்ல. நீங்கள் அவன் மீது சரிவரக் கவனம் செலுத்தியிருக்க மாட்டீர்கள்.
உங்களிடம் உள்ள பிரச்சினை எதையும் ஆராயாமலே முடிவுகட்டிவிடுவீர்கள். 'இவன் எதற்கும் லாயக்கில்லாதவன்.' 'உதவாக்கரை', 'தண்டச் சோறு', 'முட்டாள்', 'ஊதாரி', 'பொறுப்பற்றவன்.' என்றெல்லாம் சொல்வீர்கள் திரும்பத்திரும்ப அப்படிச் சொல்கிற போது அதுவே ஒரு பட்டமாய் அவனுக்கு நிலைத்துவிடும் பார்க்கப் போனால் இந்த அடைமொழிகள் நீங்கள் சிறுவனாக இருந்தபோது வாங்கிக் கட்டிக் கொண்டவை. உங்கள் அப்பா உங்களுக்குக் குத்திய அதே முத்திரைகளை இன்று உங்களுடைய பிள்ளைகளுக்கும் நீங்கள் குத்தப் பார்க்கிறீர்கள் அது தவறு.
'மண்டு, துப்புக் கெட்டது' என்று நீங்கள் முத்திரை குத்துகிற பிள்ளை அத்தனை சுறுசுறுப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் நிதானமாகச் செயல்படுகிறவன் என்பதே உண்மை.
தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத பையன் முட்டாள் அல்ல. அறிவுத்திறனுக்கும் மதிப்பெண் ணுக்கும் சம்பந்தமில்லை.
நம்பிக்கை
பெற்றோர்களால் குறைத்து மதிப்பிடப்படுகிற பிள்ளை எப்படி உற்சாகமாய் செயல்பட முடியும்? ஒரு பையன் நம்பிக்கையற்றவனாய், திறமையற்றவனாயிருந்தால் அதற்குக் காரணம் அவனுடைய பெற்றோர்கள் தாம். பெற்றோர்களின் ஊக்குவிப்பில்லாத நிலையில் தான் பிள்ளைகள் நம்பிக்கையிழக்கிறார்கள்.
அவசர தீர்மானம்
குழந்தைகள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், தங்கள் பொறுப்பை உணராதவர்களல்ல. அவர்கள் எதையும் 'லைட்டாக எடுத்துக் கொள்கிறார்கள் என்றால் அந்த வயசு அப்படி. குழந்தைகளிடம் இயல்பாகப் பேசவேண்டும், கண்ட மேனிக்கு வார்த்தைகளை இறைக்கக் கூடாது, அவர்கள் பொறுப்பற்றவர்கள், திறமையற்றவர்கள், முட்டாள்கள் என்று அவசரப்பட்டு தீர்மானித்துவிடக் கூடாது.
சகித்துக் கொள்ள முடியாமை
பெற்றோர்களின் முரட்டுத்தனத்தை, உதாசீனத்தை, இழிவான வார்த்தைகளைச் சகித்துக் கொண்டு, மனத்தின் ஆறாத ரணத்தைச் சுமந்து கொண்டு அனாதையாய் செயல்படுகிற இளைஞர்கள் எத்தனையோ பேர். சொந்த வீட்டிலேயே தாங்கள் அவமதிக்கப்படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டோ, உலகத்தைவிட்டோ சென்றுவிடுகிறவர்களும் உண்டு.
முத்திரை குத்தும் பெற்றோர்கள் தங்களுடைய அவசரத் தீர்மானங்களால்
தாங்களும் அமைதியிழந்து தங்கள் பிள்ளைகளின் அமைதியையும் பாழ்படுத்துகிற நிலை இருக்கிறது.
அதே சமயம், நீ உருப்படமாட்டே' என்று பெற்றோர்களால் சபிக்கப்பட்ட எத்தனையோ இளைஞர்கள் தங்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்குமளவு உயர்கிறார்கள் என்பதும் உண்மை.
'குழந்தைகளின் கனவுகளைக் கொஞ்சமேனும் நிறைவேற்றுங்கள்' என்ற நூலிலிருந்து, நூலாசிரியர்: சி.எஸ்.தேவநாதன்