Tobacco killed me letter to Prime minister by Oral Cancer Victim Sunita Tomar | anti-tobacco campaign Sunita Tomar died on 1st April 2015
சுனிதா தோமர்... புற்றுநோய் இவரது உயிரை இன்று (01-04-15) அதிகாலை பலி வாங்கிவிட்டது.
யார் இந்த சுனிதா தோமர்..?
நாம், திரையரங்கு சென்று சினிமா பார்ப்பவர் என்றால் நிச்சயம் சுனிதா நமக்கு பரிச்சியமானவரே. பெரும்பாலான திரையரங்குகளில் சுனிதா தோன்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிரான அந்த விழிப்புணர்வு விளம்பரத்தை பார்க்க முடியும்.
'புகையிலை என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது' என சுனிதா தனது வாக்குமூலத்தை அதில் பதிவு செய்திருப்பார்.
சரி, மரணப்படுக்கையில் சுனிதா அத்தனை வேதனைக்கு இடையேயும் பிரதமருக்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்..??
தொடர்ந்து படியுங்கள்..,
'மாண்புமிகு பிரதமருக்கு...,
இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். நான், சுனிதா தோமர், ஒரு புற்றுநோயாளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது எனக்கு வயது 26. அந்த அறுவை சிகிச்சை எனது உயிரைக் காப்பாற்றினாலும், என் வாழ்வு உருக்குலைந்துவிட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் எனது முகத்தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. என்னை சந்திக்கவோ, என்னிடம் சகஜமாக பேசவோ பலரும் தயங்கினர். புகையிலை பயன்பாட்டின் மிகக் கொடூரமான விளைவை நான் சந்தித்திருக்கிறேன்.
உடல், மன, பொருளாதார, சமூக ரீதியாக நான் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகிறேன். திரவ உணவுகளை மட்டுமே என்னால் உண்ண முடியும். புற்றுநோய் பாதிப்பு என்னை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஆட்கொள்ளலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை வேதனையுடன் நகர்த்துகிறேன்.
புகையிலை மிக எளிதாக கிடைக்கிறது. எனவே இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடிகிறது. சிறு பிள்ளைகள் புகையிலை பயன்படுத்துவதை பார்க்கும்போது நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.
புகையிலை விற்பனையை தடை செய்ய வேண்டியது அவசியம். ஆனால், அதற்கு முன்னதாக புகையிலை விற்பனையை ஒழுங்கு செய்யும் சட்டம் இருந்தும் அது சரிவர நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது இன்னும் வேதனையளிக்கும் செயல். யாராவது புகையிலை பயன்படுத்துவதைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.
"Voice of Tobacco victims" (புகையிலை பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் குரல்) என்ற பிரச்சாரத்தின் மூலம் புகையிலையின் தீமையை எடுத்துரைக்க விரும்புகிறேன். எனது முயற்சியெல்லாம், புகையிலையில் இருந்து நிறைய பேரை காப்பாற்ற வேண்டும் என்பதே. புகையிலை உடலில் ஏற்படுத்தும் பாதிப்பை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
அண்மையில், புகையிலை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் திலீப் காந்தி சுகாதார அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடவேண்டும் என்ற முடிவை மத்திய அரசு தள்ளிவைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசுத் துறையில் இவர் போன்ற பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே பொறுப்பற்ற தன்மையுடன் நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இன்றளவும், புகையிலை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அதன் தீங்கு தெரிவதில்லை. படிப்பறிவின்மையும், போதிய விழிப்புணர்வு இல்லாமையுமே இதற்குக்க் காரணம். பெரிய அளவிலான புகைப்பட எச்சரிக்கையை அச்சிடுவது புகையிலை பயன்படுத்தும் படிப்பறிவற்றவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்தியப் பிரதமர்களில் நீங்கள் ஒருவரே உங்கள் எண்ணங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல் மக்கள் கருத்துகளுக்கு மரியாதை அளிக்கிறீர்கள். அதன் காரணமாகவே நான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். வானொலியில், நீங்கள் போதைப் பொருள் தீமை குறித்து பேசினீர்கள். அதேபோல், புகையிலைக்கு எதிராகவும் பேசுவீர்கள் என நம்புகிறேன்.
மேலும், புகையிலைப் பொருட்களின் பாக்கெட்டுகள் மீது புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கையை பெரிய அளவிலான படங்களாக அச்சிடும் சட்டப்பிரிவுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்குவீர்கள் என நான் எதிர்ப்பார்க்கிறேன். இந்த தேசத்தை புகையிலை அற்ற தேசமாக மாற்றுவீர்கள் என நம்புகிறேன்.'
- சுனிதா தோமர்.
செய்தி உதவி: Kannan Thankaiah
சுனிதா தோமரின் புகையிலை விழிப்புணர்வு குறித்த காணொளியை கீழே காணலாம்
Social Plugin