மெட்ராஸ் படத்தின் கதைக்கு காரணமே ஒரு சுவர்தான். ஒரு சுவருக்காக அடித்துக்கொள்ளும் இரண்டு கொச்ட்டிகளை மையப்படுத்தி அதற்குள் காதலை செருகி மெட்ராஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்.
கதாநாயகன் காளியும் அன்புவும் உயிருக்கு உயிரான நண்பர்கள். காளி ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். அன்பு கட்சி ஒன்றில் சிறிய பொறுப்பில் இருக்கிறான். இவங்க ஏரியாவில் இருக்கும் சுவரில் எதிர் கோஷ்டி ஆளான கண்ணன் அவரோட அப்பாவின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்து வைத்திருக்கிறார். அடுத்த ஏரியாவில் இருந்து தங்கள் ஏரியாவிலுள்ள சுவரை சொந்தம் கொண்டாடும் கண்ணனின் கொட்டத்தை அடக்கத் துடிக்கும் அரசியல்வாதி மாரி துணையுடன் அந்த சுவரைக் கைப்பற்றப் பார்க்கிறான் அன்பு. இதனால் உருவாகும் பிரச்சினையில் கண்ணனின் மகன் கொல்லப்படுகிறான். இதற்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக அன்புவை காளியின் கண் முன்னே போட்டுத் தள்ளுகிறது எதிர் கோஷ்டி. தன் உயிர் நண்பனை பறி கொடுத்த காளி அதற்கு காரணமாக இருந்தவர்களை பழி வாங்கினானா? அன்புவின் லட்சியமான அந்த சுவரை கைப்பற்றினார்களா? என்பது மீதி கதை.
படத்தின் முதல் பாதியில் காளியைச் சுற்றிச் சுழலும் ஜாலியான காட்சிகள், கலையுடனான காதல் காட்சிகள் பெரும்பலான நேரத்தை கொள்ளை கொண்டுவிடுகின்றன. அவ்வப்போது அரசியல், சுவர் பற்றிய சீரியஸ் காட்சிகளை இதனிடையே தொட்டுக் கொண்டாலும் அதன் பிறகு சுவர் பற்றிய அரசியலினுள் சீரியசாக பயணிக்கிறது திரைக்கதை. திடீரென எதிர் கோஷ்டி ஆளான கண்ணனின் மகன் பெருமாள் கொல்லப்படுவதும் பழிக்குப் பழி வாங்க அன்புவை அவர்கள் போட்டுத் தள்ளுவதும் சட்டென வந்து போகிற காட்சிகள். ஆனால் இவைதான் படத்தின் வேகமான ஓட்டத்த்திற்கு மூலமாகவும் இருக்கின்றன. இடைவேளைக்குப் பிறகு, தன் கண்முன்னே தன் நண்பன் கொல்லப்படுவதைப் பார்த்த காளியின் ஆக்ரோஷமும் அதிலிருந்து அவனை மெல்ல வெளிக் கொண்டுவர கலை செய்யும் முயற்சிகளுமாக போகும் கதை மீண்டும் ஆக்க்ஷனுக்குள் பயணிக்கிறது.
ஒரு வடசென்னை பையனாகவே மாறியிருக்கிறார் கார்த்தி. அவர்களுடைய பாடி லாங்க்வேஜ், பேச்சு என அத்தனைக்கும் ஸ்பெஷல் டிரைனிங் எடுத்திருப்பார் போலிருக்கிறது. இவருக்கு ஜோடியாக கலை கேரக்டரில் வருகிறார் கேத்ரின் தெரசா. ஒரு சில காட்சிகளிலேயே ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொள்கிறார். காளியின் நண்பனாக வரும் அன்பு, அவரது மனைவி, எதிர் கோஷ்டி ஆளு போஸ்டர் நந்தகுமார், அவர் பையனாக வரும் மைம் கோபி, சில விநாடிகளே வந்து திரையை ஆக்ரமிக்கும் வேறு சில கேரக்டர்களும் கூட நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்கள். ஜானி கேரக்டரை எப்படித்தான் உருவாக்கினாரோ இயக்குநர் ரஞ்சித்…! அவர் திரையில் வரும் போதெல்லாம் தியேட்டர் உண்டு இல்லை ஆகிறது. இவர் பேசுகிற வசனங்களும் இவரது பாடி லாங்வேஜ்ம் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.
- 'ஆள்' - சினிமா விமர்சனம் | Aal 2014 Tamil Movie review
- 'ஜீவா' சினிமா விமர்சனம் | 26 Sep 2014 | 'Jeeva' Tamil Movie review
சந்தோஷ் நாராயணன் இசையைப் பற்றி சொல்ல வேண்டும்… பாடல்கள் எல்லாமே ரசிக்க வைக்கின்றன… அதிலும் நான் நீ… மனதை மயக்கும் பாடல். கானா பாலா எழுதி பாடிய இறந்திடவா நீ பிறந்தாய்? பாடல் மனதை டச் செய்யும் விதத்தில் இருக்கிறது. பின்னணி இசையை மட்டும் ஒலிக்க விட்டு சில காட்சிகளை மொத்தமாக நகர்த்தியிருப்பது ரசிக்க வைக்கிறது. கதைக்கு தேவையான வடசென்னையை மட்டும் கேமிரா வழியே நுழைய அனுமதி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி. படத்தின் விறுவிறுப்புக்கு பிரவினின் எடிட்டிங்கும் ஒரு காரணம். படத்தை இயக்கியிருக்கிறார் ரஞ்சித். அட்டக் கத்தி படத்தில் ஜாலியான ஒரு கதையை படமாக்கியவர் இந்தப் படத்தில் சீரியஸ் கதையில் காதல் கலந்து மெட்ராஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
Madras Movie Official Trailer: