மும்பையை சேர்ந்தவர் ரஞ்சனா அனேராவ். இவரது தாயாரின் பெயருக்கு மாநில அரசின் உரிமம் பெற்ற ரேஷன் கடை ஒன்று இருந்தது. இந்நிலையில் தாயாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அந்த உரிமத்தை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு ரஞ்சனா அரசிடம் கோரிக்கை மனு அளித்தார்.
ஆனால் ரஞ்சனாவுக்கு திருமணம் ஆகிவிட்டதால், திருமணமாகி சென்றுவிட்ட மகள் பெற்றோரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக கருதப்பட மாட்டார் என்ற அரசின் விதி இருப்பதாக கூறி அவருக்கு உரிமம் அளிக்க மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
இதனை எதிர்த்து ரஞ்சனா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இன்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரசின் மேற்கூறிய விதிமுறை மற்றும் உத்தரவை செல்லாது என்று அறிவித்ததோடு, பாலின பாரபட்சம் அரசியல் சாசனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே இது அரசியல் சாசனத்திற்கு மாறானது என்றும் கூறி, ரஞ்சனாவுக்கு உரிமம் வழங்க உத்தரவிட்டது.