Type Here to Get Search Results !

உன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது?

உன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது?

சின்னஞ்சிறிய தவளைகள் கூட்டமாக நின்றிருந்தன. அங்கு ஒரு ஓட்டப்பந்தயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த ஓட்டப்பந்தயம் சற்று வித்தியாசமானது. ஏனென்றால் மிக உயரமான மேடை ஒன்றில் ஏறிச்சென்று, அதன் உச்சியை அடைய வேண்டும் என்பதே வெற்றிக்கான இலக்காகும்.
அந்த உயர்ந்த மேடையைச் சுற்றி பெருங்கூட்டம் கூடியது. கூட்டத்தினர் இந்தப் போட்டியைக்காண ஆவலுடன் இருந்தார்கள் என்பது அவர்களது ஆரவாரத்திலிருந்து தெரிந்தது.

போட்டி ஆரம்பமாயிற்று...

இந்தச் சிறிய தவளைகள் மேடையின் உச்சிக்கு ஏறிச்செல்லும் என்று எவருமே நம்பவில்லை.
""மேடையில் ஏறிச் செல்லும் வழி மிகவும் கஷ்டமானது. அதனால் இவர்களால் கண்டிப்பாக  உச்சியைச் சென்றடைய முடியாது!'' என்றனர் சிலர்.
""மேடையின் உச்சி மிகவும் உயரம். வெற்றி அடைவது என்பது இயலாத காரியம்!'' என்றனர் வேறு சிலர். ஏறிக்கொண்டிருந்த தவளைகளில் சில மேற்கொண்டு ஏறிச்செல்ல முடியாமல் திணறின. மேலும் அவை ஒன்றன் பின் ஒன்றாகக் கீழே விழுந்தன.

ஆனாலும் சில தவளைகள் பெரும் முயற்சியுடன் மேடையில் ஏறிக்கொண்டிருந்தன.
ஆனாலும் கூட்டத்தினர், ""இது முடியாது. இது மிகவும் உயரம்!'' என்று கூறியபடியே இருந்தனர்.
Tamil short story, frog story, frog competition, thavalai potti, unnal mudiyun, you can win, avoid negative toughts, edhirmarai karuthu
ஏறிக்கொண்டிருந்த சிறிய தவளைகள் மிகவும் களைப்புற்றதால் அவற்றால் மேற்கொண்டு ஏறிச்செல்ல முடியவில்லை.
ஆனால் ஒரே ஒரு தவளை மட்டும் ஏறிக்கொண்டே இருந்து இறுதியில் உச்சியையும் அடைந்துவிட்டது.
எல்லாருக்குமே அந்தத் தவளை எடுத்துக் கொண்ட முயற்சி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

நிறைய தவளைகள் கலந்துகொண்ட இந்த ஓட்டப்பந்தயத்தில், ஒரே ஒரு தவளை மட்டும் எப்படி இவ்வளவு முயற்சி எடுத்து இலக்கை அடைய முடிந்தது?
எல்லோருக்குள்ளும் இந்தக் கேள்வி எழுந்தது. அவர்கள், இது குறித்து தெரிந்து கொள்ள விரும்பினர்.
போட்டியாளர்கள் கேட்டனர். ""உன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது?''
வெற்றி பெற்ற தவளை, பதிலேதும் சொல்லவில்லை. திரும்பிக் கொண்டது!
அப்போதுதான் எல்லோருக்கும் ஓர் உண்மை புரிந்தது.
வெற்றி பெற்ற தவளைக்குக் காது கேட்காது.

எந்த ஒரு வெற்றியாளரும் தன் இலக்கை அடைய முயலும்போது மற்றவர்கள் கூறும் எதிர்மறை கருத்துகளை காதில் வாங்கக்கூடாது.
மேடைமீது ஏறிக்கொண்டிருந்த தவளைகளுக்கு மற்றவர்கள் பேசும் "முடியாது, இயலாது' என்ற எதிர்மறை வார்த்தைகள் கேட்டபடி இருந்ததால் அதனால் மனம் தளர்வுற்று, பலவீனமடைந்து தங்களது முயற்சியில் தோல்வியடைந்தன.
ஆனால் காது கேட்காத தவளையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், பெருமுயற்சி எடுத்து தன் இலக்கை அடைந்தது.

- மோகனாஸ்ரீ

Tags: Tamil short story, frog story, frog competition, thavalai potti, unnal mudiyun, you can win, avoid negative toughts, edhirmarai karuthu, tamil moral stories