Type Here to Get Search Results !

‘அஞ்சான்’ விமர்சனம்!

‘அஞ்சான்’ விமர்சனம்!

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்கிறார் கிருஷ்ணா. அங்கு தன் அண்ணனான ராஜூவை தேடி அலைகிறார். அப்போது சந்துரு, ராஜூ இருவரும் தன் அடியாட்களுடன் அந்தேரி இடத்தில் கடத்தல் தொழில் செய்து வந்தாக ராஜூவின் கூட்டாளியான கரீம்பாய் கூறுகிறார். கரீம் பாய் மூலம் மற்ற விவரங்களை கேட்டு அறிகிறார் கிருஷ்ணா.

அப்போது அந்தேரிக்கு புதிய கமிஷனராக வரும் அசோக் குமார், சந்துரு, ராஜூவின் ஆட்களை கைது செய்து விடுகிறார். இதனால் கோபமடையும் ராஜூ கமிஷனரின் மகளான நாயகி ஜீவாவை திருமணத்தின்போது கடத்தி விடுகிறார். கமிஷனரிடம் தன் கூட்டாளிகளை விடுவிக்கும்படி பேரம் பேசுகிறார் ராஜூ. அதன்படி கூட்டளிகளை கமிஷ்னர் விடுவிக்க, ராஜூவும் ஜீவாவை விடுவிக்கிறார். இதைத்தொடர்ந்து நடக்கும் சில சந்திப்புகளில் ராஜூ, ஜீவா இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் மும்பையின் மிகப்பெரிய தாதாவான இம்ரான் பாய் சந்துருவையும் ராஜூவையும் விருந்துக்கு அழைக்கிறார். அங்கு இருவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார் இம்ரான் பாய். இதனால் கோபம் அடையும் சந்துரு புலம்பியபடி இருக்க, ராஜூ இம்ரான் பாயை கடத்தி வந்து நண்பன் சந்துருவிடம் காண்பிக்கிறார். இருவரும் சேர்ந்து இம்ரான் பாயை மிரட்டி அனுப்புகின்றனர். இதனால் சந்தோஷம் அடையும் சந்துரு, ராஜூவுக்கு புதியதாக கார் ஒன்றை வாங்கி கொடுத்து ஜீவாவுடன் ஜாலியாக சுற்றிவிட்டு வர அணுப்புகிறார்.

இருவரும் மும்பையை சுற்றி வரும்போது திடீர் என்று துப்பாக்கி சத்தம் கேட்கிறது. ராஜூவை நோக்கி துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வருகிறது. அதிலிருந்து ராஜூ தப்பிக்கிறார். அப்போது ராஜூவுக்கு ஒரு இடத்திற்கு வரும்படி போன் வருகிறது. அங்கு சென்று பார்க்கும் போது சந்துரு வெட்டுக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். இதைக்கண்டு கொதிக்கும் ராஜூ, இம்ரான்பாய் தான் சந்துருவை கொன்று இருப்பான் என்று கூறிக்கொண்டு இம்ரானை தீர்த்துக்கட்ட கூட்டாளி அமர் உடன் காரில் செல்கிறார்.
anjann
கார் பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது ராஜூவின் கூட்டாளியான அமர் காரை நிறுத்தி விட்டு, ராஜூவையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார். குண்டு பாய்ந்த ராஜூ பாலத்தில் இருந்து நீரில் விழுந்து விடுகிறார். இந்தக் கதையை கரீம் பாய் சொல்ல கிருஷ்ணா கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜூவை சுட்டுக்கொன்ற அமர் தனது கூட்டாளிகளுடன், கரீம் பாயை சந்திக்க வருகிறான்.

அங்கு கிருஷ்ணாவை சந்திக்கிறான். நான்தான் ராஜூவை கொன்றதாக கிருஷ்ணாவிடம் கூறுகிறான். இதைக் கேட்டு கோபமடையும் கிருஷ்ணாவையும் சுட்டுக் கொல்லுமாறு தன் கூட்டாளியிடம் துப்பாக்கியை தருகிறான் அமர். இங்கேதான் படத்தில் திரும்புமுனை ஏற்படுகிறது. மீதிக்கதையை திரையில் காண்க….

படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கலக்கலாக அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகளில் அதகலபடுத்தியிருக்கிறார். படத்தில் பேசும் பஞ்ச் வசனங்கள் சூர்யாவின் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. ஜீவாவாக நடித்திருக்கும் சமந்தா சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார், கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். சந்துருவாக வரும் வித்யூத் ஜாமல் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக இருவரையும் சுற்றுலா அனுப்பும் காட்சிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதமாக உள்ளது. யுவன் பாடிய  ‘காதல் ஆசை…’ பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது. சூர்யா பாடிய  ‘ஏக் தோ தீன் சார்…’ பாடல் சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பாடல்களில் வரும் நடனக் காட்சிகள் நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் தனித்துவம் தெரிகிறது.
மும்பை நகரத்தின் இரவு காட்சியை சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மிக அழகாக காட்டியிருக்கிறது. சண்டைக்காட்சிகளையே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு குறை ஏதும் வைக்கவில்லை இயக்குனர் லிங்குசாமி. சூர்யாவை மையமாக வைத்து லிங்குசாமி கதையில் வைத்திருக்கும் திருப்புமுனை இயக்குனரின் சாமார்த்தியத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாயகியின் பெயரில் கூட திருப்புமுனை வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘அஞ்சான்’ அதகலபடுத்தியிருக்கிறான்.
Tags: Anjaan tamil movie review, Actor Surya and Smantha Anjaan review, Latest tamil cinema review, August 15 release tamil movie review, Anjaan vimarsanam, thirai vimarsanam