அறிமுக
இயக்குனர் ஒருவரின் படம் என்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் அந்தப்
படத்தைப் போய் பார்க்க மாட்டோம். அதிலும் வளர்ந்து வரும் ஒரு நாயகனின்
மூன்றாவது படம். இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் போய்ப்
பார்க்கும் போது அந்தப் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நம்மை
ஆச்சரியப்படுத்திவிடும். அப்படித்தான் இந்த அரிமா நம்பி அமைந்துள்ளது.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஆனந்த் சங்கர்
இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம். ஆனந்த் சங்கரை தன்னுடைய சிறந்த உதவி
இயக்குனர்களில் ஒருவர் என முருகதாஸ் பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக்
கொள்ளலாம். அந்த அளவிற்கு குருவின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார் ஆனந்த்
சங்கர்.
படத்தில்
அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை, அனாவசியமான காதல் காட்சிகள் இல்லை,
சிரிக்க வைக்காத நகைச்சுவைக் காட்சிகள் இல்லை, மொத்தமாக ஒரு மூன்று
கதாபாத்திரங்கள்தான் படத்தில் முக்கியமாக வருகின்றன. அவர்களை வைத்து ஒரு
அதிரடி ஆக்ஷன் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார்கள். சமீப காலமாக த்ரில்லர்
படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் சில படங்கள் எந்த த்ரில்
விஷயங்களையும் சேர்க்காமல் நம்மை சோதிக்கவே செய்தன. ஆனால், இந்தப் படத்தில்
திரைக்கதையை த்ரில்லாகவும், பரபரப்பாகவும் அமைத்து படத்தை வேகமாக
நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இடைவேளை வந்தது கூடத் தெரியாத அளவிற்கு
அவ்வளவு வேகம் படத்தில் அமைந்துள்ளது.
ஒரு
ஹோட்டல் பப்பில் வைத்து பிரியா ஆனந்தைப் பார்க்கிறார் விக்ரம் பிரபு.
அப்புறம் என்ன பார்த்ததுமே காதல் பற்றிக் கொள்கிறது. அடுத்த நாளே
டின்னருக்கு பிரியாவை விக்ரம் அழைக்க அவரும் சம்மதித்து வருகிறார். அங்கு
சாப்பிடும் சாரி, நன்றாகக் குடித்து விட்டு, பின்னர் பிரியாவின்
வீட்டிற்கும் சென்று இருவரும் குடிக்கிறார்கள். அப்போது யாரரோ இருவரால்
பிரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். விக்ரமால் அவர்களைத் துரத்தியும்
கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. போலீசிடம் புகார் கொடுத்து அவர்களுடன்
திரும்பவும் வந்து பிரியா வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்படி எதுவுமே
நடக்காதது போல் அவர் வீடு அமைதியாக இருக்கிறது. ஏதோ, சந்தேகம் வந்து
விக்ரம் , பிரியா ஆனந்தின் அப்பா இருக்குமிடத்திற்குச் செல்ல, அவருக்கு
அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடர்ந்து சில கொலைகள் நடக்க, பிரியா
ஆனந்தைத் தேடிப் புறப்படுகிறார் விக்ரம். அவர் பிரியாவைக் கண்டுபிடித்தாரா,
அவரை ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.
இவன்
வேற மாதிரி படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தைத்தான் தேர்ந்தெடுத்தார்
விக்ரம் பிரபு. ஆனால், அந்தப் படம் அவருக்கு வேற மாதிரியான ரிசல்ட்டைக்
கொடுத்திருந்தாலும், இந்தப் படம் அவரை ஏதோ ஒரு விதத்தில் நம்ப
வைத்திருக்கும். அந்த நம்பிக்கை அவருக்கு வீண் போகவில்லை. அடுத்த ஆக்ஷன்
ஹீரோ அவதாராத்திற்கு விக்ரம் தயாராகி வருகிறாரோ என யோசிக்க வைக்கிறது
இந்தப் படம். அவருக்கு வைத்திருக்கும் சண்டைக் காட்சிகளின் தாக்கத்தைப்
பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனாலும், ஆறடி உயர விக்ரம் அடிக்கிறார்
என்றால் திரையில் நம்பவே முடிகிறது. முகத்தில் இருக்கும் விறைப்பை மட்டும்
இன்னும் குறைத்துக் கொள்ளலாம். அவர் அப்பாவிடம் இருக்கும் குழந்தைத்தனமான
சிரிப்பை நிறையவே கடன் வாங்கிக் கொள்ளலாம்.
விக்ரமுக்கு
ஜோடியாக பிரியா ஆனந்த். ஆனால், இருவருக்கும் இடையில் கிளைமாக்சில்
மட்டும்தான் காதல் காட்சியை வைத்திருக்கிறார் இயக்குனர். அதுவரை
இவர்களிருவருக்கும் காதலை சொல்லக் கூட நேரமில்லை. வழக்கமாக கிளாமரான
நடிப்பிலும், அழகான ஆடையிலும் அசத்தலாக இருப்பார் பிரியா ஆனந்த். ஆனால்,
இந்தப் படத்தில் அதற்கெல்லாம் வேலையே இல்லை. ஒரே ஒரு டூயட் பாடல் மட்டுமே.
இருந்தாலும் படம் முழுவதும் விக்ரமுடன் பயணிக்கும் அளவுக்கு முக்கியத்துவம்
வாய்ந்த கேரக்டராக அமைந்துள்ளது. பொதுவாக ஆக்ஷன் படங்களில் பாடல்களுக்கு
மட்டும்தான் நாயகியை பயன்படுத்துவார்கள். இந்தப் படத்தில் கொஞ்சம்
ஆக்ஷனுக்கும் சேர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தில்
வில்லனாக சக்கரவர்த்தி. எவ்வளவு நாளைக்குத்தான் உள்ளூர் அரசியல்வாதிகளையே
வில்லன்களாக பார்த்து வருவது, இந்தப் படத்தில் சக்கரவர்த்தி ஒரு மத்திய
அமைச்சர். ஆரம்பத்தில் அவர் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு சஸ்பென்ஸ் எனத்
தெரியவில்லை. அதிலும் அவரது கையை மட்டும் காட்டும் போது, அது ஏதோ ஒரு
பெண்ணின் கையைப் போன்றே தெரிந்தது. அட...பரவாயில்லையே ஒரு பெண்ணை
வில்லனாக்கியிருப்பார்களோ, என நினைத்தால் அப்புறம் சக்கரவர்த்தியைக்
காட்டுகிறார்கள். ஆனால், அவ்வளவு பவர்ஃபுல்லாக இவரது கதாபாத்திரம்
உருவாக்கப்படவில்லை.
டிரம்ஸ்
சிவமணி இசையமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். பின்னணி
இசையில் காட்டிய ஈடுபாட்டை, பாடல்களில் காட்டத் தவறிவிட்டார்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவுதான் படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக
சின்ன சின்னத் தெருக்களில் நடக்கும் அந்த சேசிங் காட்சியில் அவர் காமிரா
வேகமாக ஓடியிருக்கிறது.
ஆக்ஷன்
படம் என்றாலே லாஜிக் பார்க்கக் கூடாது என்பது என்ன வேண்டுதலோ...பல
இடங்களில் லாஜிக் ஓட்டைகள். பிரியா வீட்டுக்கு விக்ரம் வந்தது எப்படி
காமிராவில் பதிவாகாமல் போனது என்பதற்கு விளக்கமில்லை. அதன் பின், பிரியா
அப்பாவின் சேனல் அலுவலகத்திற்குள் அவ்வளவு கெடுபிடிகளுக்கிடையில் விக்ரம்
பிரபு நுழைந்து, எம்டி கேபினில் சுலபமாக நுழைகிறார். எந்த அலுவலகத்தில்
எம்டி கேபின் திறந்தேயிருக்கும். கடத்தி வைக்கப்பட்டுள்ள பிரியாவை
கடத்தல்காரர்களை சுலபமாக ஏமாற்றிவிட்டு காப்பாற்றி வருகிறார் விக்ரம்.
இப்படி ஒரு சில ஓட்டைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் படத்தை
ரசிக்கலாம்.
அரிமா நம்பி - அறிமுக இயக்குனரை நம்பி படத்தைப் பார்க்கலாம்.
Tags: Arima nambi thirai vimarsanam, tamil cinema vimarsanam, latest tamil movie review, tamil film review, arima nambi review 2014.
Social Plugin