Curriculam Vitea(CV)'kum Resume'kum உள்ள வித்தியாசம் என்ன..?
நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி?
நல்ல ரெஸ்யூம் (Resume) எழுதுவது நல்ல காதல் கடிதம் எழுதுவதுபோல. கடிதத்தைப் படித்து மட்டுமே யாரும் காதலில் விழுவதில்லை. ஆனால், மோசமாக எழுதப்பட்ட காதல் கடிதம் உறவு முறிவைத்தான் தரும். அதேபோல சரியாக எழுதப்படாத ரெஸ்யூமே நேர்முகத் தேர்வு அழைப்புக்கே முட்டுக்கட்டையாக வாய்ப்புண்டு. நல்ல வேலை என்கிற சிகரத்தை அடைய நீங்கள் எடுத்து வைக்கிற முதல் அடி நல்ல ரெஸ்யூம் எழுதுவது. அதனால் நல்ல ரெஸ்யூம் எழுதுவது எப்படி என்று இந்த வாரம் பார்ப்போம்.
ரெஸ்யூம்க்கும், கரிக்குலம் விட்டே (curriculam vitea) இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என பல பேர் கேட்பதுண்டு. பொதுவாக நம் ஊரில் இரண்டு வார்த்தைகளையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தினாலும் சில வேறுபாடுகள் இருக்கிறது. வட அமெரிக்கா போன்ற நாடுகளில் கல்வி, ஆராய்ச்சி, பட்ட மேற்படிப்பு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க கரிக்குலம் விட்டே பயன்படுத்துவார்கள். அதனால் கரிக்குலம் விட்டே-யில் கல்வித் தகுதி மற்றும் ஆராய்ச்சித் துறையில் பெற்ற அனுபவங்கள், சாதனைகள், சிறப்பு தகுதிகள் போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், ரெஸ்யூம்-ன் நோக்கம் வேலைக்கு விண்ணப்பம் செய்வது மட்டுமே. ரெஸ்யூம் பொதுவாக இரண்டு பக்கங்களுக்கு மேல் போகக்கூடாது. கரிக்குலம் விட்டே என்ற லத்தீன் வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பு ‘என் வாழ்க்கைப் பாதை’ என்பதே. அதனால் கரிக்குலம் விட்டே விலாவாரியாக மூன்று, நான்கு பக்கங்கள் வரை போகலாம்.
தற்போது நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்காவிட்டால்கூட ரெஸ்யூம் தயார் செய்து வைத்திருப்பது நல்லது. ரெஸ்யூம் எழுதுவதில் முதல் கட்டம் உங்களைப் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் சேகரித்து வைப்பது. நீங்கள் பங்கேற்ற போட்டிகளில் பெற்ற பரிசுகள், சான்றிதழ்கள், கலந்து கொண்ட பயிற்சி வகுப்புகள், ஈடுபாடுள்ள சமூகச் சேவை போன்ற மற்ற காரியங்கள் போன்ற தகவல்களை தலைப்புவாரியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய சாதனையாக இருந்தால்கூட அதற்கான சான்றிதழ் இருந்தால் அவற்றையும் குறித்துக் கொள்ளுங்கள்.
கரிக்குலம் விட்டே, ரெஸ்யூம் இரண்டுக்கும் நிலையான அமைப்பு என்று எதுவுமில்லை. வேலைக்கு விண்ணப்பிக்கும் தருணத்தில் எதிர்பார்க்கப்படும் தகுதி, திறன்களுக்கு ஏற்றபடி இந்த லிஸ்டில் இருந்து எடுத்து தேவையானவற்றைச் சேர்த்து ரெஸ்யூம் தயாரிக்க வேண்டும். பொதுவாக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதற்கு முன், உங்கள் ரெஸ்யூமை படிக்க ஒரு நிமிடத்திற்குக் குறைந்த நேரமே செலவிடுவார்கள். அதனால் வேலைக்குத் தேவையான மிக முக்கிய தகவல்களை முதல் பக்கத்தில் தருவது அவசியம். ரெஸ்யூமின் நோக்கம் விண்ணப்பிக்கும் வேலைக்கு நீங்கள் முழு தகுதியானவர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதே. எனவே சமயோசிதத்துடன் ரெஸ்யூம் எழுதுவது அவசியம்.
ரெஸ்யூமின் தலைப்பில் உங்கள் பெயர் மற்றும் அதற்கு கீழே உங்கள் சரியான முகவரி, கைபேசி எண், இ-மெயில் முகவரி போன்ற தகவல்களை தர வேண்டும். அதன் கீழே உங்களை பற்றியும் தொழில் தொடர்பான உங்கள் குறிக்கோள்கள் பற்றியும் இரண்டு, மூன்று வரிகளில் எழுதலாம். உங்களைப் பற்றி எழுதும்போது உங்கள் சிறப்பு திறன்கள், பெற்ற விருதுகள், பரிசுகள் பற்றி குறிப்பிடலாம். வேலை முன்அனுபவம் இல்லாத பட்சத்தில் உங்கள் கல்வித் தகுதிகளை முதலில் தரலாம். இதில் சமீபத்திய தகுதியை முதலில் தர வேண்டும். பட்டத்தின் தலைப்பு, கல்லூரி, பல்கலைக்கழகத்தின் பெயர், படித்த வருடம், மதிப்பெண் சதவிகிதம் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். கல்லூரியில் நீங்கள் முதல் மதிப்பெண்ணோ, ரேங்க்கோ பெற்றிருந்தால் அதை அடிக்கோடிட்டு காட்டலாம்.
வேலை முன்அனுபவம் இருக்கும் பட்சத்தில் அதை கல்வித் தகுதிக்கு முன் தரலாம். வேலை முன் அனுபவத்தை இரண்டு விதமாக பட்டியலிடலாம்:
1. கால அடிப்படை (chronoligical order): வெவ்வேறு காலகட்டத்தில் நீங்கள் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் பதவி, மேலும் அங்கு நீங்கள் ஆற்றிய முக்கிய கடமைகள்.
2. திறன்கள் அடிப்படை (functional order): வேலைத் திறன்கள் சார்ந்து நீங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பெற்ற அனுபவங்கள். ஒரே நேரத்தில் பல பகுதிநேர வேலைகள் செய்திருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது.
வேலை முன்அனுபவம், கல்வித் தகுதிக்குப் பிறகு நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை தொடர்பான உங்கள் தனித்திறன்கள், பெற்ற அனுபவங்களை குறிப்பிடலாம். வேலை தொடர்பான அனுபவங்கள் என்பது நீங்கள் சென்ற பயிற்சி வகுப்புகள், கல்லூரி மற்றும் சம்மர் புராஜெக்ட்கள், உங்கள் துறை சார்ந்த குழுக்களில் உங்கள் பங்கேற்பு போன்றவற்றைக் குறிக்கும்.
இவற்றைத் தகுந்த தலைப்பிட்டு பட்டியலிட வேண்டும். இவற்றைச் சுருக்கமான வாக்கியங்களாகவோ, புல்லட் புள்ளிகளாகவோ தரலாம். நற்சான்று தரும் நபர்களின் (References) தகவல்களை கேட்கப்பட்டிருந்தால் மட்டுமே தர வேண்டும்.
via Naren Bala