பரோட்டா
சாப்பிட்டால் நல்லதா... கெட்டதா?
''பரோட்டா சாப்பிட்டால், உடல் நலத்துக்குக் கேடு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு என நோய்கள் வரிசை கட்டுமாமே... உண்மைதானா?'' என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார், சென்னை, டயட்டீஷியன் ஷைனி சந்திரன்.
''பரோட்டா, முழுக்க முழுக்க மைதாவால் செய்யப்படும்
உணவு. கோதுமையில் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, அதில்
இருந்து பிரிக்கப்படுவதுதான் மைதா.
மைதா
மூலம் தயாராகும் பரோட்டாவில் உடலுக்குத் தேவையான நல்ல சத்துக்கள் ஏதும்
இல்லை. பரோட்டாவுடன் சேரும் குருமா போன்ற கிரேவி மட்டுமே புரோட்டீன்
மற்றும் கலோரிகளை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல், பரோட்டாவில் அளவுக்கு
அதிகமான எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இது, துளிகூட உடம்புக்கு நல்லது
கிடையாது.
பொதுவாக, உடல் உழைப்பு அதிகம் இருப்பவர்கள் பரோட்டா
சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகிவிடும். பெரிதாக பிரச்னை இல்லை. ஆனால்,
அதிக உடல் அசைவுகள் இன்றி, 'டெக்ஸ்’கில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு
பரோட்டா நல்லதல்ல. அதிகமாக ஓடி விளையாடாத குழந்தைகளும் பரோட்டா
சாப்பிட்டால் வயிற்றுவலியால் அவதிப்படுவார்கள்.
பரோட்டாவில் எண்ணெய் அதிகமாக சேர்க்கப்படுவதால்,
கொழுப்புச் சத்து அதிகமாகிறது. இதன் காரணமாக உடல் எடை கூடும். சர்க்கரை
வியாதி, இதய நோய் மற்றும் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக
பரோட்டாவை தவிர்க்க வேண்டும்.
'எனக்கு பரோட்டா பிடிக்கும், சாப்பிட்டே தீர வேண்டும்’
என்பவர்கள், அதன் விளைவை ஈடு செய்ய, தினமும் வாக்கிங், உடற்பயிற்சி என்று
மெனக்கெட வேண்டும்'' என்று வலியுறுத்தினார் ஷைனி சந்திரன்.
பரோட்டா பிரியர்களே... உஷார்!