அவர் மனைவியிடம் சரி உட்காருங்கம்மா பல்லை சுத்தம் செய்யலாம் என்று சொன்னேன்.அந்தம்மா வாயை துணியால் மூடியபடி நான் சுத்தம் செய்துக்கமாட்டேன் எனக்கு வேண்டாம் என்று சொன்னார்.
வலி இருக்காதும்மா உட்காருங்க என்று அவரிடம் சொன்னேன்,அப்பவும் அமர மறுத்து விட்டார்.அவள் கணவர் கொஞ்சம் கோபமாக அமர சொல்லி வற்புறுத்திய பிறகு ’சரி நீங்கள் வெளியே உட்காருங்கள் நான் சுத்தம் செய்து கொள்கிறேன்’ என்று தன் கணவரிடம் சொன்னார்.
சரி என்று அவள் கணவர் வெளியே ரிசப்ஷனில் உட்காரச் சென்று விட்டார்.இப்பவாவது உட்காரும்மா என்றேன் ,இருக்கட்டும் டாக்டர் நான் இங்கேயே இருக்கிறேன் என்றார்.
அங்க நின்னா எப்படிம்மா சுத்தம் செய்ய முடியும் டெண்டல் சேர்ல உட்காரும்மா என்றேன்.சிறிது நேரம் தயங்கிய அந்தம்மா வாயை மறைத்து கொண்டிருந்த துணியை எடுத்துவிட்டு வாய்க்குள் கையை விட்டு சடாரென்று பல் செட்டை கழட்டி என் கையில் குடுத்தார்.
டாக்டர் எங்க வீட்டுக்காரருக்கு நான் பல் செட் போட்டிருப்பது தெரியாது,கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு விபத்துல அடிப்பட்டு என் மேல் பற்கள் எல்லாம் எடுக்க வேண்டியதாக போச்சு.பிறகு பல் செட் கட்டிக் கொண்டேன்.
கல்யாணம் ஆகி இதுவரை நான் பல் செட் போட்டிருக்கேன்னு அவருக்கு தெரியாது நீங்க தயவு செய்து அவர்கிட்ட சொல்லிடாதீங்க என்றார்.என்னது இவ்வளவு நாளா உங்க வாயில பல் செட் போட்டிருப்பது உங்க கணவருக்கு தெரியாதா என்று நான் ஆச்சரியமாக கேட்டேன்.நல்லா குடும்பம் நடத்துறாங்கப்பா என்று மனசுக்குள் நினைத்தபடி அந்த பல் செட்டை வாங்கி சுத்தம் செய்து குடுத்தேன்.
பிறகு அவங்க கணவரை அழைத்து பல்லை சுத்தம் செய்தாச்சு,ஒரு மருந்து எழுதி இருக்கேன் அதை வாங்கி ஈறில் மசாஜ் செய்தால் ஈறு சரி ஆகிவிடும் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
’பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.’
என்று வள்ளுவரே சொல்லி இருக்கிறார்,அதனாலா நானும் அவர் கணவர் கிட்ட உண்மையை சொல்லலை.
பல் செட்டுக்கு பல்லை சுத்தம் செய்திட்டு அதுக்கு மசாஜ் செய்ய மருந்து எழுதி கொடுத்த முதல் பல் டாக்டர் நானாகத்தான் இருக்கும்.
என்னைக்கு அந்த அம்மா பல் செட் கழண்டு அவுங்க கணவர் அருவாள எடுத்துகிட்டு என்னை தேடி வரப்போறாரோ...
- Ilayaraja Dentist