ஓர் ஏரி ஓரமா ரெண்டு பையன்கள் நடந்து போய்கிட்டிருக்காங்க.
அதுல ஒருத்தன் பணக்காரவீட்டுப் பையன். இன்னொருத்தன் ஏழை. இவங்க ரெண்டு பேரும் போய்கிட்டிருக்காங்க.... வழியில ஓர் இடத்துலே ஒரு சோடி செருப்பு இவங்க கண்ணுலே பட்டுது.
ஒரு விவசாயி அந்தச் செருப்பை அங்கே விட்டுட்டு பக்கத்துலே இருந்த ஏரியிலே கை- கால் கழுவிக்கிட்டிருந்தார்.
உடனே அந்தப் பணக்காரப் பையனுக்கு ஒரு யோசனை!
அவன் சொன்னான்.
"டேய்! இப்ப ஒரு வேடிக்கை செய்யலாம்... அந்தச் செருப்பு இரண்டையும் தூக்கி எட்டத்துலே வீசி எறிஞ்சிடுவோம். அந்த ஆளு வந்து பார்த்துட்டு செருப்பைத் தேடி அல்லாடுவான்... அங்கேயும் இங்கேயும் ஓடுவான். திருதிருவென முழிப்பான். அதை நாம இரசிக்கலாம். நல்லா தமாசா இருக்கும்!" அப்படின்னான்.
இப்படிச் சொல்லிப்புட்டு அந்தச் செருப்புகளைத் தூக்கப் போனான்.
“கொஞ்சம் பொறு“ ன்னான் அந்த ஏழைப் பையன்.
"ஏன்?" ன்னு கேட்டான் இவன்.
இப்ப அந்த ஏழைப்பையன் சொன்னான்...
"நீ சொல்றது ஒண்ணும் வேடிக்கை இல்லே. உன்னோட செருப்புத் தெலைஞ்சா உன் அப்பா உடனே உனக்கு வேறே செருப்பு வாங்கிக்கொடுத்துடுவார்! ஆனா அந்த ஆளுக்கு இந்தச் செருப்பு தொலைஞ்சா வேறே புதுசா வாங்குறதுக்கு வாயையும், வயத்தையும்
கட்டி பணத்தைச் சேர்க்கவேண்டியிருக்கும்! அதனால நான் ஒரு வேடிக்கை சொல்றேன். அது மாதிரிச் செய்! அது இன்னும் தமாசா இருக்கும்" அப்படின்னான்.
"சரி! சொல்லு"ன்னான் இவன்.
“செருப்பு இரண்டும் அது இருக்கிற இடத்துலேயே இருக்கட்டும். உன் சட்டைப் பையிலேயிருந்து ஒரே ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அந்தச் செருப்பு மேலே அதோட குதிப் பகுதியிலே வை. வச்சுட்டு நாம ரெண்டு போரும் அந்த மரத்துக்குப் பின்னாடி மறைஞ்சி நின்னுக்குவோம்" அப்புறம் பார் வேடிக்கையைன்னான்.
அதே மாதிரி ஒரு ரூபாய் காசை செருப்பு மேலே வச்சிட்டு இவங்க மறைஞ்சு நின்னுக்கிட்டாங்க.
கொஞ்ச நேரத்துல அந்த விவசாயி வந்தார்.
கால்லே உள்ள மண்ணைத் தட்டிப்புட்டு செருப்பை மாட்டறதுக்குப் போனார். அங்கே இருந்த காசு கண்ணுல பட்டுது! அவருக்கு ஆச்சிரியமா போச்சு. அதை கையிலே எடுத்துப் பார்க்கிறார். நாலுபக்கமும் திரும்பி திரும்பிப் பார்க்கிறார். கடைசியிலே ஆகாயத்தைப் பார்க்கிறார்.
ஆண்டவா! இது உன்னோட கருணைதான்..
நீதான் யாரோ புண்ணியவான் மனசுல தருமம் பண்ணற எண்ணத்த உண்டாக்கியிருக்க!
அந்தப் புண்ணியவான் நல்லாயிருக்கனும்! ன்னு வாழ்த்தி அந்தக் காசைக் கண்ணுல ஒத்திக்கிட்டார்.
மறைஞ்சிருந்து பார்த்திட்டிருந்த ஏழைப் பையன் இப்பச் சொன்னான்,
"பார்த்தியா..? உன்னைப் புண்ணியவான்னு வாழ்த்திட்டுப் போறார் அந்த ஆள்! அவருக்கும் சந்தோசம். உனக்கும் சந்தோசம். உனக்கு ஒரு ரூபாய்ங்கறது பெரிசில்ல. அதனால நமக்குக் கிடைச்சிருக்கிற மகிழ்ச்சி ரொம்ப உயர்வானது!"
Social Plugin