Type Here to Get Search Results !

வேண்டாம் வெளிநாட்டு மோகம்!....அரேபியாவில் ஆடு மேய்த்தவர் - உண்மை கதை

velinattu velai | aadu valarthal in arabia | Fate of overseas jobs workers | jobs in arabia | useless jobs in saudi, அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)

 velinattu velai | aadu valarthal in arabia | Fate of overseas jobs workers | jobs in arabia | useless jobs in saudi, அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)
useless jobs in Saudi Arabia
இதை ஷேர் செய்யுங்கள் நண்பர்களே ( இது மிக மிக முக்கியமான பதிவு) தமிழர்கள் நன்றாக படித்து தெரிந்து கொள்ளவும் அனுபவித்தவர்கள் சொல்லுகிறார்கள் ஏற்றுகொள்ளுங்கள் இதை உங்கள் நண்பர்களிடம் மற்றும் உங்கள் உறவினர்களிடம் கூறவும் .....

அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம்!)


நீண்ட பைஜாமா குர்தா.. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ.. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..

“திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன்.

அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.’என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.

மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.

‘எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டிவந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள்.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.

மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன்.

அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன்.
“எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது.

என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன்.
ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது.

அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.

மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன்.

என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.

இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன்.


இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம்.

வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம்.
டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது.

நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்..


“தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்....

நன்றி நண்பர்களே ....

Thanks to Mr. Rajeev Rajan.


 velinattu velai | aadu valarthal in arabia | Fate of overseas jobs workers | jobs in arabia | useless jobs in saudi, அரேபியாவில் ஆடு மேய்த்தவர் (வேண்டாம் வெளிநாட்டு மோகம் | வேண்டாம் வெளிநாட்டு மோகம்!....அரேபியாவில் ஆடு மேய்த்தவர் - உண்மை கதை