பாசம்...
என்னுடைய தாத்தா பெரும்பாலும் வெளியூர் சென்று தங்கியதில்லை.கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வேலையாக பென்னாகரம் சென்றார். இரண்டொரு நாளில் வந்துவிடலாம் என போனவர் ஆறேழு நாளாய் வரமுடியவில்லை.
அந்த சமயத்தில் அவர் வளர்த்த மாட்டிற்க்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. தண்ணீர் குடிக்கவில்லை ,தீனி சாப்பிடவில்லை ,சாணமும் போடவில்லை,.கால்நடை மருத்துவர் வந்து வைத்தியம் செய்தும் எந்த பலனும் இல்லை. அடுத்த நாள் மாட்டால் தலையையே தூக்க முடியவில்லை. தொடர்ந்து இரண்டு நாளாய் தீனி சாப்பிடவில்லை.
மீண்டும் மருத்துவர் வந்து குளுக்கோஸெல்லாம் போட்டு பார்த்தார்.எந்த முன்னேற்றமும் இல்லை, மருத்துவர் சொன்னார் “இனிமே மாடு பொழைக்காது இப்பவே குடுத்தீங்கனா கறி போடறவங்க வாங்கிக்குவாங்க இல்லனா வீணா தான்எடுத்து பொதைக்கனும்” என்று. தாத்தா பாசமுடன் வளர்த்த மாடு அவரே வந்து முடிவு செய்யட்டும் என்று அவருக்கு தகவல் சொன்னோம்.
அவரும் அவசரமாக புறப்பட்டு வந்தார், தலையை தரையில் வைத்து கிடந்த மாடு அவரை தூரத்தில் பார்த்ததும் “ம்ம்ம்ம்மாஆஆஆ”என கத்திக்கொண்டு எழுந்து நின்றது.
எங்களுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. அவர் அருகில் வந்து “என்னாச்சு ஒனக்கு யா தீனி திங்க மாட்டங்கறயாம்” என்றார். மாடு நாவால் நக்கி கொடுத்தது,தாத்தா தாழியில் தண்ணீரை மொண்டு வைத்து “எனக்கு என்னமோ ஆயிருச்சுனு நெனச்சயா எனக்கு ஒன்னும் ஆகல ஊருக்கு போயிருந்தேன்” என்றார்.
அவர் வைத்தவுடன் மாடு 3 நாட்களுக்கு பிறகு தண்ணீரை குடித்தது.பிறகு தீனி தின்றது. வளர்த்தவர் இறந்து போன பிறகு ஒரு சில நாய்கள் தானும் செத்து போயிருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தாத்தாவை காணாததால் அந்த மாடு ஏதோ நினைத்து சாகும் நிலையை எட்டி இருக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.
ஒருநாளைக்கு நல்ல விலை வந்தால் விற்க்கப்பட்டு விடும் அந்த மாட்டின் காலடியில் மனித பாசங்கள் மிதிபட்டுக்கிடப்பதைபோல் உணர்கிறேன்....!
via Kiruba
Social Plugin