Type Here to Get Search Results !

ரிங்டோன் வைப்பதில்கூட எத்தனை நன்மைகள்!

கோவையில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் இது. செல்வந்தர் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த இளைஞர்கள் தங்கள் அன்னையை, கவலைக்கிடமான நிலையில் அழைத்து வந்திருந்தனர்.

தீவிர அறுவை சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அம்மையாருக்கு, முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றை மறுநாளே செய்ய வேண்டிய கட்டாயம். அந்த அறுவை சிகிச்சை சிக்கலானதும்கூட.
தாயார்மீது பாசம் மிக்க அந்த சகோதரர்கள், தங்கள் இஷ்ட தெய்வமாகிய முருகனை பிரார்த்தனை செய்து கொண்டே கண்ணீருடன் அறுவை சிகிக்சைக்கு அனுப்பினார்கள்.

அறுவை சிகிக்சைக் கூடத்துக்குள் ஸ்ட்ரெச்சர் நுழையும்போதே, பக்கத்தில் இருந்த யாரோ ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனில், ரிங்டோன் ஒலித்தது…. “சஷ்டியை நோக்க சரவண பவனார்…” என்கிற கந்த சஷ்டிக் கவசம்.
கடவுள் அருள் கிடைத்த நிம்மதி, அந்த சகோதரர்களுக்கு. அவர்கள் நினைத்தது போலவே அறுவை சிகிச்சை நன்கு நடந்து அபாய கட்டத்தை அந்த அம்மையார் தாண்டினார்.

மறுநாள், தாயாரைக் காண அந்தச் சகோதரர்களில் ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்தபோது அதே ரிங்டோன் ஒலித்தது. திரும்பிப் பார்த்தால் அதே மனிதர்!!
ஆனால் அந்த மனிதரும், அருகில் அமர்ந்திருந்த மூதாட்டியும் குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தார்கள். இந்த இளைஞர் அருகில் சென்று விசாரித்தபோது விவரம் புரிந்தது.

நல்லாபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, அந்த மனிதர். அவருடைய மனைவிக்கு கணையத்தில் ஏற்பட்ட கவலைதரும் நோய்க்காக மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். கையிருந்த சிறிதளவு நிலத்தின் பேரில் கடன்வாங்கி சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து சிகிச்சை பெறவேண்டும். நாளொன்றுக்கு இருபதாயிரம்வரை ஆகும். சிகிச்சை வாரக்கணக்கிலோ மாதக் கணக்கிலோ தொடரலாம். கையில் சிறிதும் பணமில்லாமல், அவரும் அவருடைய அம்மாவும் அழுது கொண்டிருந்தார்கள்.

இளைஞர் சொன்னார், “எங்கள் அம்மா அறுவை சிகிச்சைக்கு உள்ளே போகும்போது உங்கள் செல்ஃபோனில் ஒலித்த பாடல் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அதே போல் அவர்கள் குணமானார்கள். உங்கள் மனைவியின் சிகிச்சைக்கு எவ்வளவு இலட்சம் செலவானாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன். மனம் கலங்காமல் சிகிச்சையைத் தொடருங்கள்”.
சொன்னது போலவே சிகிச்சைக்காக ஆன சில இலட்சங்களைத் தந்ததுடன், அந்த ஏழைப்பெண் குணமானதும் தன்னுடைய காரிலேயே ஊரில் போய் விட்டுவந்தார் அந்த இளம் தொழிலதி திரு.சிவா.

நல்ல ரிங்டோன் வைப்பதில்கூட எத்தனை நன்மைகள்! இதை நண்பரிடம் சொல்லி முடித்தேன். அதுவரை வாய்பிளந்து கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பரின் ரிங்டோன் அந்த நேரம் பார்த்து அலறியது… “நான் அடிச்சா தாங்க மாட்டே! நாலுமாசம் தூங்கமாட்டே?!!”

via namadhunambikkai